திருத்தம் வேண்டாம்! ரத்துச் செய்! - இலங்கைக்கு மற்றும் ஒரு சர்வதேச அழுத்தம்
இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை அரசாங்கம் முழுமையாக ரத்துச்செய்ய வேண்டும் என சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள், அர்த்தமுள்ள வகையில் மேற்கொள்ளப்படாமை கவலை தருவதாக அமைந்திருப்பதாக அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்குள் அல்லது வெளியில் சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகள் குறித்து சந்தேகிக்கப்படும் எந்தவொரு தனிஆள் தனிஆட்களின் குழு, சங்கம் மற்றும் அமைப்பு ஆகியவற்றின் சுதந்திரத்தை தன்னிச்சையான மற்றும் காலவரையறையின்றி பறிக்கும் வகையில் இந்த அமைந்துள்ளது.
தடுப்புக்காவல் காலத்தைக் குறைத்தல், 12 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரை பிணையில் அனுமதிப்பது போன்ற விடயங்களில் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள், சந்தேகத்துக்குரிய ஒருவரை, தொடர்ந்தும் ஒரு வருடம் நீதிமன்ற விசாரணை இல்லாமல் தடுத்து வைத்திருக்க வழியேற்படுத்துவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.'
எனவேதான், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை உடனடியாக ரத்துச்செய்ய வேண்டும் என்று கடந்த செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அழைப்பு விடுத்திருந்ததாகவும் அறங்கூறுநர் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் காத்திரமான மறுசீரமைப்பு அல்லது ரத்துச்செய்வதற்கு தெளிவான ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளதையும் சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழு கோடிட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் விடயத்தில் இதுவரை முன்னேற்றம் காணாத நிலையில், அந்த தோல்வியை திசைதிருப்பும் முயற்சியாக, இந்த சீர்திருத்தத்தை கொண்டு வர முயற்சிப்பதாக சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழுவின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் இயன் சீடர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நேர்மையற்ற சீர்திருத்த முயற்சிகளால், பயங்கரவாத தடைச்சட்டத்தை சீரமைக்கமுடியாது.
அதனை முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், கைது செய்யப்பட்டு, 2020 ஏப்ரல் முதல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையின் மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுதலை செய்யுமாறு உரிமை ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில், சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழுவின் இந்தக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆகியனவும் தமது கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளன.