ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதியின் கருத்துக்கு கண்டனம்
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
2019ம் ஆண்டு ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் இடம்பெற்ற மாபெரும் சோகம் என ஜனாதிபதி அநுரகுமார இன்று பொலனறுவையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் உள்நாட்டில் 7 விசாரணைகள் குழுக்களும், சுமார் 4 வெளிநாட்டு தரப்புக்களும் விசாரணை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளின் போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக எந்தவொரு தரப்பும் தெரிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்ட சஹ்ரான் தலைமையிலான குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க உளவுப் பிரிவான எப்.பி.ஐ உள்ளிட்ட தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சுமத்தும் குற்றச்சாட்டு பாரதூரமானது எனவும், அவ்வாறு உண்மையில் சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அந்த விடயங்களை தாமதமின்றி நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென கோரியுள்ளார்.
அவ்வாறு இன்றி வெறும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக ஜனாதிபதி இவ்வாறு குற்றம் சுமத்துவாராயின் அது மிகவும் இழிவான செயல் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.