அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது - விமல் வீரவங்ச
மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டின் இறுதியில் கட்டாயம் நடத்தப்படும் என அரசாங்கம் கூறினாலும் தேர்தலை நடத்தும் இயலுமை கிடைக்காது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் புதிய தேர்தல் முறை தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
அந்த சட்டத்திற்கான வரைவை உருவாக்க வேண்டும். தொகுதிகளைத் தீர்மானிப்பது தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்கக் காலத்தை வழங்க வேண்டும்.
அந்த சட்ட வரைவு சட்டமா அதிபரின் கைகளுக்குச் சென்று, மீண்டும் அமைச்சரவைக்கு வந்தவுடன் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
இப்படியான நடைமுறைகளை நிறைவு செய்ய நீண்டகாலம் தேவை. இதனால், இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியும் என நான் நினைக்கவில்லை என வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.