நாட்டு மக்களுக்கு தரமான தடுப்பூசிகளை வழங்குமாறு ராஜித சேனாரட்ன கோரிக்கை
இந்த நாட்டு மக்களுக்கு தரமான கோவிட் தடுப்பூசிகளை அரசாங்கம் வழங்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சரும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களில் 112 பேர் இதுவரையில் மரணித்துள்ளனர், பைசர் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், அஸ்ட்ரசென்கா தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் ஒருவர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
சினோபார்ம் தடுப்பூசிகளை விடவும் வேறு தடுப்பூசி கொண்டு வருமாறு நாம் கூறிய போது எம்மை பல்வெறு வழிகளிலும் விமர்சனம் செய்தனர்.நாம் இந்த தடுப்பூசி ஏற்றுகையை குழப்புவதாக குற்றம் சுமத்தினர்.
எனினும், இந்த நாட்டு மக்களுக்கு தரமான தடுப்பூசிகளை வழங்குமாறு நாம் கோருகின்றோம். முடக்க நிலை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் செய்துள்ள பரிந்துரையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்.
பொருளாதாரக் காரணிகளை கருத்திற் கொண்டு உயிர்களை பலிகொடுக்க முடியாது. இந்த நாட்டின் மருந்துப் பொருட்கள் தொடர்பான அமைச்சருக்கு நாட்டில் எந்த மருந்துக்கு தட்டுப்பாடு என்பது தெரியவில்லை.
எனினும் எதிர்க்கட்சித் தலைவருக்கு அந்த விடயங்கள் நன்றாக தெரிந்திருக்கின்றது என டொக்டர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.



