ஹிஜாப் போராட்டத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் பெண்களின் போராட்டம்! கடும் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்த தலிபானின் உத்தரவுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கிலாந்து, அமெரிக்காவும் கண்டித்துள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர்.
தலிபான்களின் ஆட்சி
அதேவேளையில், ‘கடந்த முறையை போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும்’ என்று உறுதியளித்தனர். ஆனால், தலிபான்களின் ஆட்சி அவ்வாறாக நடைபெறவில்லை.
தற்போது, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் ஆப்கன் அரசின் உயர்கல்வி அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த உத்தரவை நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை உயர்கல்வி அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜியாவுல்லா ஹாஷிமி உறுதி செய்தார்.
தாலிபன் அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர்.
இதன்போது மூன்று பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தகார் மாகாணத்திலும் போராட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தடை அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து. நேற்று புதன்கிழமை நூற்றுக்கணக்கான பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதை அந்நாட்டு பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெண் கல்வியை கட்டுப்படுத்தும் அண்மைய கொள்கை இதுவாக அமைந்துள்ளது. நாட்டின் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பெண்கள் ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிய தடையை விதித்த தாலிபான்கள் அரசுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெண்கள் ஹிஜாப் அணிந்து காபூலின் தெருக்களில் அணிவகுத்து செல்வதையும், பதாகைகளை உயர்த்தி கோஷங்களை எழுப்புவதையும் காட்டுகிறது.
இந்த குழு முதலில் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான காபூல் பல்கலைக்கழகத்தின் முன் கூடுவதற்கு திட்டமிட்டிருந்தது, ஆனால் அதிகாரிகள் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்களை அங்கு நிறுத்தியமையால், இடம் மாற்றப்பட்டது.
சில சிறுமிகளும், பெண் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள்
பொது இடங்களுக்கு ஆண் துணையின்றி செல்லக்கூடாது. உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு தடை, இருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் திரைச்சீலை கொண்டு மாணவர்களையும் மாணவிகளையும் பிரிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இவை ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக வெடித்து போல ஆப்கனில் மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை மெல்ல சூடுபிடிக்க தொடங்கின.
இப்படி இருக்கையில் இந்த புதிய தடை பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நங்கர்ஹார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாலிபன் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில் தாலிபன் அரசின் இந்த முடிவு கடும் பேரழிவை ஏற்படுத்தும் என்று அந்நாட்டின் மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் நிலோபர் பயத் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் உட்பட உலக நாடுகள் கண்டனம்
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் நேற்று கூறும்போது, “ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து கல்வியில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. பெண்கள் கல்வி கற்காமல் ஒரு நாடு எவ்வாறு வளர்ச்சியடையும்” என்று கவலை தெரிவித்தார். மேலும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘மகள்களுக்கு தந்தையாக, அவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு வழங்க நிறைய இருக்கிறது. அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் நுழைய அனுமதி மறுப்பது மிக பெரிய பின்னடைவாகும்’ என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது.