கோட்டாபய வீடு போகும் வரை நாங்கள் ஓயமாட்டோம்! - காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஆவேசம் (Video)
புதிய இணைப்பு
"கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்திடலில் மக்கள் ஆரம்பித்த மாபெரும் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
ஏராளமான மக்களின் பங்குபற்றுதலுடன் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கோட்டா வீட்டுக்குப் போகும் வரை நாங்கள் வீட்டுக்குப் போகமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு, குடிதண்ணீர் மற்றும் குடிபானங்களை வழங்கி வருகின்றனர்.
போராடும் மக்களுக்காக வைத்தியர்களும் இலவச வைத்திய சேவைகளை வழங்கி
வருகின்றனர்.
அதேவேளை, போராட்டக்காரர்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மெத்தைகள்
மற்றும் நகரும் கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளன.
மூன்றாம் இணைப்பு
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முடிவுறாது தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனினும் நேற்றைய தினத்தைப் போலவே குறித்த பகுதியில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட அரசுக்கெதிரான போராட்டம் தற்போது வரை நடைபெற்று வருகின்றது.
கொட்டித் தீர்க்கும் மழையிலும் போராட்டக்காரர்கள் சளைக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது போராட்டத்தில் மேலும் பலர் இணைந்து கொண்டுள்ளதுடன் கோ ஹோம் கோட்டா என்ற கோஷம் பலமாக ஒலிக்கின்றது.
முதலாம் இணைப்பு
அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை ரீதியான போராட்டம் இன்று வரை தொடர்கின்றது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது ஜனாதிபதி செயலக வளாகத்தில் அதிகளவான போராட்டக் காரர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தியாளர்.