சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய தயாராகி வரும் போராட்டகாரர்கள்
ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியமை குறித்து போராட்டகாரர்கள், சர்வதேச நீதிமன்றம் மற்றும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர்.
தனியாக முறைப்பாடு செய்யும் ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள்
குறிப்பாக ஊடகவியலாளர்கள் மற்றும் சில சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஊடக அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகளின் அமைப்புகள் தனித்தனியாக முறைப்பாடுகளை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, காலிமுகத்திடலில் உள்ள கோட்டா கோ கம என பெயரிட்டுள்ள பகுதியில் இருந்து வெளியேற போவதில்லை என போராட்டகாரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முடிவு செய்துள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் சுதந்திரமாக போராட்டம் நடத்தலாம்
புதிய ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ பணிகளை தடையின்றி செய்வதற்காகவே ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த போராட்டகாரர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ நேற்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் காலிமுகத்திடல் போராட்டகளத்தில் உள்ள சுதந்திரமாக போராட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் பொலிஸார், அங்கு சென்று தடைகளை ஏற்படுத்த மாட்டார்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஒரு இடத்தை போராட்டகாரர்களுக்கு ஒதுக்கி கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.