இலங்கை என்ற நாட்டை நாங்கள் இழந்து விடுவோம்! பகிரங்க எச்சரிக்கை
மக்கள் போராட்டம் தோல்வியடையவும் இல்லை. முடிவடையவும் இல்லை என முறைமைகள் மாற்றத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பின் அழைப்பாளர் சட்டத்தரணி இந்திக தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை
மேலும், “எல்லா துறைகளிலும் எமது நாடு தோல்வியடைந்துள்ளது. போராட்டங்களினால் எதிர்பார்க்கப்பட்டதற்கு அமைவாக பொருளாதார குற்றவாளிகள் மற்றும் மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை.
மேலும் நாட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடித்த நிதியை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்தோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
தொடர்ச்சியாக அமைச்சர்களை நியமித்துக்கொண்டிருக்கின்றார்கள். சமையல் எரிவாயு கொள்வனவில் மில்லியன் கணக்கான நிதியை கொள்ளையடித்திருக்கின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது போராட்டங்கள் நிச்சயமாக வெற்றியடைய வேண்டும் என தோன்றுகிறது. அவ்வாறு இல்லையெனின் எங்களுக்கு நாடு ஒன்று மிஞ்சாது.
அரசியல்வாதிகளுக்கு ஆதரவு இல்லை
நாங்கள் சுயாதீனமாகவே செயற்படுவோம். எந்தவொரு கட்சிக்கோ அரசியல்வாதிக்கோ ஆதரவாக செயற்பட மாட்டோம்.
நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து முறைமை மாற்றங்களை செய்யாவிட்டால் நம் நாட்டை நாங்கள் இழந்து விடுவோம்” என தெரிவித்துள்ளார்.