காலி முகத்திடலில் ஒன்றுகூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்! அருகில் பறக்கும் ட்ரோன் கமரா (Video)
புதிய இணைப்பு
பிரதான ஆர்ப்பாட்டக் களமான காலி முகத்திடலில் தற்போது பெருமளவான மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலி முகத்திடலில் இதுவரை நாட்களும் போராட்டத்தில் பங்குகொண்ட பலரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், ட்ரோன் கமரா ஒன்றும் போராட்டக்களத்திற்கு அருகில், துறைமுக நகரத்திற்கு மேலாக பறந்து வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இந்த அரசாங்கத்திற்கு எதிராக லிபர்ட்டி பிளாஸாவிற்கு அருகில் மற்றுமொரு போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
50 பேர் வரையில் இணைந்து அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முதலாம் இணைப்பு
கொழும்பு மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மதகுருமார்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பெருந்திரளானோர் ஒன்றுதிரண்டு கலந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவு
இதேவேளை, இன்றைய போராட்டத்துக்குத் தடை விதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை நாடிய போதும் அதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்திருந்தது.
போராட்டக்காரர்கள் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டால் பொலிஸார் தமது அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.
மேலதிக தகவல் - ராகேஷ்