யாழில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுப்பு
யாழ்ப்பாண நகரம்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கண்டித்தும் விலை ஏற்றத்திற்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் அ.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
வட்டுக்கோட்டை
அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று வட்டுக்கோட்டை - வழக்கம்பரை பகுதியில் இடம்பெற்றது. இப் போராட்டமானது வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வழக்கம்பரை அம்மன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பித்த இப் போராட்டமானது பேரணியாகச் சென்று சங்கானை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் நிறைவுற்றது.
பதாதைகளை ஏந்தியவாறு அரசினை பதவி விலகுமாறு கோரி, அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
ஊர்காவற்துறை
ஊர்காவற்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு "மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, உயிர்த் தியாகம் செய்ய வைக்காதே, நோயாளிகளைக் காப்பாற்று என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டாபய அரசிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை
வெளிக்காட்டி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பருத்தித்துறை
இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
காலை 11.30 மணியளவில் ஆரம்பித்த குறித்த போராட்டம் வீதி வழியாக சுமார் ஒரு கிலோமீட்டர் வரை சென்று மீண்டும் மருத்துவமனையை அடைந்தது.
இதில் குறிப்பாக மோசமான நிதி நிர்வாகத்தில் மனித உயிர்களைப் பலி எடுக்காதே, ராஜபக்ச குடும்பத்திடமிருந்து இலங்கையைப் பாதுகாப்போம், மருந்து இல்லை சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது, அனைத்து உயிர்களும் ஆபத்தில், மருந்துகள் இல்லாததால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, வைத்தியசாலையில் மருந்து இல்லை வீட்டில் உணவில்லை, உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்குக் கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் இடம்பெற்றது.
இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த குறித்த போராட்டத்தில்
தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என பலரும்
கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெல்லிப்பளை
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இப் போராட்டமானது யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் ஆரம்பிக்கப்பட்டு மல்லாகம் சந்தி ஊடக சென்று சுன்னாகம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொடும்பாவியை வீதியில் இழுத்துச் சென்று சுன்னாகம் பேருந்து நிலையத்தில் தீ மூட்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போதைய அரசாங்கம் வீட்டுக்குச் செல்லவேண்டும்
எனவும் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
