நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவித்து வீதிக்கு இறங்கிய கொட்டகலை - ரொப்கில் மக்கள்
கொட்டகலை - ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 26 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமக்கு நிவாரணம் கிடைக்கவில்லையென தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கை நேற்று மாலை 4.30 மணியளவில் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் டிட்வா புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு சுமார் 46 வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்து தளபாடங்கள் உட்பட பல உடமைகளை இழந்துள்ள போதும் தமக்கு எவ்வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
நிவாரண நிதி
அவர்கள் மேலும் கூறுகையில், தமக்கு நான்கு பிஸ்கட் பக்கட்டுக்கள் மாத்திரமே கிடைத்ததாகவும், அதனை ஐந்து வயதுக்கு குறைந்தவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சாப்பிட கூடாது என தெரிவித்ததாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கிராம சேவகர் 46 குடுபங்களுக்கு 25000 ரூபா நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு எழுதி சென்றதாகவும், இதில் சுமார் 20 குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரணம் நிதி கிடைத்ததாகவும், ஏனைய 26 குடும்பங்களுக்கு இது வரை நிவாரணம் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.





