நவம்பர் 30ஆம் திகதி சுகவீன விடுப்புப் போராட்டம்! அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அழைப்பு
2027ஆம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தில் 25,000 ரூபா வாழ்க்கைப்படியை நிபந்தனையின்றி உள்வாங்குமாறு கோரி, எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்,
அரசின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேற்தட்டு மனோநிலையிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய சில தொழிற்துறையினரைத் திருப்திப்படுத்தும் வகையில் சம்பள உயர்வுகளும் மேலதிக கொடுப்பனவுகளும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அரசாங்கத்திடம் வலியுறுத்தல்
அரச ஊழியர்களின் வாழ்வாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு 25,000 ரூபா வாழ்க்கைப்படியை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்குமாறு பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கை அரசியலமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) சாசனங்களால் உறுதிப்படுத்தப்பட்ட தொழில்சார் உரிமைகளுக்கு அமைவாகவே இப்போராட்டம் சட்டபூர்வமாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த சங்கத்தினர், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 30ஆம் திகதி சுகவீன விடுப்பைப் பயன்படுத்தி போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
அரசியல் ரீதியான நெருக்கடி
இப்போராட்டம் எவருடைய அரசியல் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்காகவோ அல்லது அரசாங்கத்தை அரசியல் ரீதியாக நெருக்கடிக்குள்ளாக்குவதற்காகவோ முன்னெடுக்கப்படுவதல்ல எனவும், தமது நியாயமான தொழில்சார் மற்றும் வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்துவதே நோக்கம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, போராட்டத்தில் பங்கேற்கும் உத்தியோகத்தர்களுக்கு எந்தவொரு தரப்பினரோ அல்லது மேலதிகாரிகளோ அழுத்தங்களையோ நெருக்கடிகளையோ பிரயோகிக்க வேண்டாம் எனவும் பத்திரிகையாளர் சந்திப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.