கல்வி அமைச்சின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை
கடந்த வியாழக்கிழமை கல்வி அமைச்சின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசேட விசாரணையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பெப்ரவரி 23ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கல்வி அமைச்சினுள் உட்புகுந்த பௌத்த பாளி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் திடீர் சத்தியாக்கிரகம் ஒன்றை மேற்கொண்டனர்.
அதன் போது பொலிசார் உள்நுழைந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்திருந்தனர் இதன் போது கல்வி அமைச்சில் பணியாற்றும் ஆசிரியர் இடமாற்ற சபையைச் சேர்ந்த இரண்டு ஆசிரியா்கள் மீதும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு அவர்களைக் கைது செய்துள்ளனர்.
ஆசிரியர் தொழிற்சங்கப்பிரதிநிதிகள் முறைப்பாடு
அது தொடர்பில் வௌ்ளிக்கிழமை மாலை கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவை சந்தித்து ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முறையிட்டுள்ளனர்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பெப்ரவரி 23ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணையொன்றை முன்னெடுக்க கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் 01ம் திகதியளவில் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உறுதியளித்துள்ளார்.



