இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம் (PHOTOS)
இலங்கையில் நடந்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினால் போராட்டம் ஒன்று நேற்று லண்டனில் அமைந்துள்ள உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
கடனை திருப்பி செலுத்த மாட்டோம், அரசியல் கைதிகளை விடுதலை செய், அடிப்படை வாழ்வாதார பொருட்களின் விலையை குறை, விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டினை நடைமுறைபடுத்து, தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமையை அங்கீகரித்தல், காணி அபகரிப்பை நிறுத்து, தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்து போன்ற பல்வேறுப்பட்ட கோஷங்கள் போரட்டக்காரர்களால் எழுப்பப்பட்டது.
குறித்த போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்சவின் உருவ பொம்மை எரியூட்டப்பட்டது. போராட்டத்தின் இறுதியில் பேசிய தமிழ் சொலிடாரிட்டியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இராகவன் “கோட்டாபய அரசினை வீட்டுக்கு அனுப்புவதோடு மட்டும் இந்த போராட்டம் ஓய்ந்து விட கூடாது. அவர்களை வீட்டுக்கு அனுப்பிய பின்னர் பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண பின்வரும் திட்டமிடல்களை முன்வைக்கிறோம்” என்றார்.
தமிழ் சொலிடாரிட்டி முன்வைக்கும் கோரிக்கைகள்
ராஜபக்ச அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கியுள்ள மக்களின் வெகுஜன நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்ய தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும்.
ராஜபக்ச குடும்பத்தை வீட்டிற்கு அனுப்புதல் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்வு காண முடியாது. கட்சி மாற்றமோ - ஆட்களை மாற்றுதலோ மக்களின் வாழ்வாதாரத்தை எவ்விதத்திலும் மேம்படுத்தப்போவதில்லை.
ராஜபக்சவின் அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். அத்தோடு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், தொழிலாளர்கள் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் சமூகத்தின், துவேச அடிப்படை அல்லாத அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைக்க ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பேரவையை அமைக்கவும்.
இந்த பேரவை பின்வரும் அடிப்படைகளை முன்வைத்து நமது பலத்தை கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கக் கோருகிறோம்.மூலதனக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியத் தொழில்கள் மற்றும் உணவு உற்பத்தியில் பணத்தை மறு முதலீடு செய்ய வலியுறுத்துகிறோம்.
அனைத்து தனியார்மயமாக்கல் முயற்சிகளையும் நிறுத்தி, அனைத்து வங்கிகளையும் முக்கிய தொழில்களையும் உடனடியாக தேசியமயமாக்கி, தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும்.
அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்த வேண்டும்.அனைத்து சிறு கடன்களையும் ரத்து செய்யுங்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அனைத்து ஊதிய நிலுவைகளையும் செலுத்த வேண்டும்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கையின்படி தோட்ட மற்றும் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கவும் மற்றும் குறைந்தபட்ச ஊதிய தரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கிய பாரிய எதிர்ப்பைக் கட்டியெழுப்ப உடன்பட முன்வருமாறு அனைத்து தொழிற்சங்கம் மற்றும் மாணவர் அமைப்புக்கள் மற்றும் சோசலிச அமைப்புக்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கை உட்பட சில அடிப்படை திட்டங்களில் நாம் ஒன்றுபட வேண்டும். அனைத்து தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் பணியிடங்கள், கல்விக்கூடங்களில் மற்றும் உள்ளூர் சமூகங்களில் வெகுஜன எதிர்ப்பை அணிதிரட்ட நிர்வாக குழுக்களை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
போராட்டத்திற்குத் தயாராவதற்கு தொழிற்சங்கவாதிகள் ,சோசலிச அமைப்புகள் மற்றும் பிற செயற்பாட்டாளர்களை கொண்ட ஒரு தேசிய சட்டமன்றத்தை உருவாக்குங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.