வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - அமெரிக்க காங்கிரஸ் நடவடிக்கை
வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களினால் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்கவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் இதனை தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் தமிழர் படுகொலை
மேலும், "அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூறல் மற்றும் உண்மைக்கான அவர்களின் முயற்சியில் எங்கள் போராட்டத்தை அங்கீகரித்தமைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்." என அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த மாதம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களால் 'ஈழத் தமிழர்கள் ஜனநாயக ரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும்' மற்றும் 'நீடித்த அமைதியான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்' எனப்படும் தீர்மானங்களை அறிமுகப்படுத்தினர்.
ஆயுதப் போரின் இறுதி வாரங்களில் முள்ளிவாய்க்காலில் தமிழர் படுகொலை இடம்பெற்று 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்வை எட்டாத போராட்டம்
இந்தநிலையில், ஆயுதப் போரின் முடிவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ்க் குடும்பங்கள் 2017ஆம் ஆண்டு முதல் வடக்கு - கிழக்கு முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
சுமார் 2611 நாட்களாக இந்த குடும்பங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றபோதிலும், இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டாதிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |