முற்றுகையிடப்பட்டது ஜனாதிபதி இல்லம் அமைந்துள்ள பகுதி! சம்பவ இடத்தில் பலத்த பாதுகாப்பு: கடும் பதற்ற நிலை
கொழும்பின் புறநகர் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் தற்போது அதனை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் தற்போது மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. |
களத்தில் விசேட அதிரடிப்படையினர்! துண்டிக்கப்பட்ட இணைய இணைப்புக்கள்..
கொழும்பின் புறநகர் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் இடம்பெற்றுவரும் இடத்தில் சற்றுமுன்னர் விசேட அதிரடிப்படையினர் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையால் போடப்பட்டிருந்த தடுப்புச்சுவர் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடி படையினர் அழைக்கப்படுள்ளனர். இதேவேளை குறித்த பகுதியில் இணைய இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் பெருமளவான மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது முதலாவது பொலிஸ் தடையினை தகர்த்தெறிந்து போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றுள்ளனர். இனவாதத்தையும் - மத வாதத்தையும் உருவாக்கிய குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று கோஷமிட்டப்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. |
கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள மிரிஹான - பகிரிவத்த மாவத்தை பகுதியில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். |