வாழ்வாதாரத்தை அரசியல் சூழ்ச்சியால் இழந்த மக்கள் - 13 வாரமாக தொடரும் போராட்டம்
வலி. வடக்கு மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
இந்த போராட்டமானது, இன்றைய தினம்(13.09.2026) 13ஆவது வாரமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
36 வருடங்களாக போராடும் மக்கள்
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி தற்போது இவர்களுக்கான பதில்களை விரைவாக வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முதன்மையான வேண்டுகோளாகவும் இருக்கின்றது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில், பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

