கடலட்டை பண்ணை வளர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு
கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணை வளர்ப்புக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் டிசம்பர் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்று (14.12.2022) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்தொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆ.சதீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடையவுள்ளது.
மகஜர் கையளிப்பு
போராட்ட நிறைவில் வடமாகாண ஆளுநர் செயலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
கிராஞ்சி பகுதி கடற்தொழிலாளர்களின் போராட்டத்தை உரிய தரப்பினர் கண்டுகொள்வதாக இல்லை. மக்களின் விருப்புக்கு மாறாக கடலட்டை பண்ணைகளை அமைக்க முடியாது. கடலட்டை பண்ணையை முன்னுரிமைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடமாகாணத்திலுள்ள அனைத்து சிவில் சமூகத்தினரும் அரசியல் தரப்புகளும் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவளித்து பங்கேற்க வேண்டுமென இ.முரளிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
பாரிய நெருக்கடி
அத்துடன் சிறிய கடற்தொழிலாளர்களை பழிவாங்கப்படுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் பாரிய நெருக்கடி நிலை ஏற்படுமென தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குரூஸ் தெரிவித்துள்ளார்.