கீரிமலையில் அத்துமீறி கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் - உடனடி நடவடிக்கை கோரி மக்கள் போராட்டம்
கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழையிலும் அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(20.09.2026) கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
வலி. வடக்கின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையின் இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
அவற்றினை மீள அள்ள வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்.
மருத்துவ கழிவுகள்
இதேவேளை, தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் மாத இறுதிக்குள் மீள அள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா, வலி. வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சனும் கழிவுகளை மீள அள்ள வேண்டும் என பணித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் மருந்தேற்றும் ஊசிகள், இரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.
இதுபோன்ற கழிவுகள் அப்பகுதி மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், குப்கைகளை அகற்றும் நடவடிக்கைளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


