யாழ்.மண்டைதீவில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: சம்பவ இடத்திற்கு சமூகமளிக்காத திணைக்களத்தினர்
காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினால் நில அளவை திணைக்களத்தினர் பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டம் மண்டைதீவு - கடற்படை முகாமிற்கு அருகில் இன்றைய தினம் (12.07.2023) காலை முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று (12.07.2023) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள்
இந்த அளவீட்டுப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் இன்று (12.07.2023) காலை.7.30 மணியளவில் மண்டைதீவு கிழக்கில் நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கடற்படை முகாம் முன்பாக பொலிஸார் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். கலகமடக்கும் கடற்படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் கடற்படையினர் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து கொண்டிருந்தனர்.
குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினர்
போராட்டத்தின் நிறைவில் போராட்டகாரர்களுக்கு பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன்போது "எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்" என கடற்படை அதிகாரியை பார்த்து காணி உரிமையாளர் பேசியுள்ளார்.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்வரபாதம் சரவணபவன் கருத்து
போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அரசாங்கம் திட்டத்தைத் தீட்டி தங்களுடைய நிகழ்ச்சி நிரலை ஒப்பேற்றிக் கொண்டு செல்கின்றார்கள்.
அதிலும் தற்போது பிடித்து வைத்திருக்கும் காணிகள் யாவும் வளம் நிறைந்த காணிகள். குறிப்பாக பொன்னாலை மக்கள் குடிநீருக்காக பவுசர் மூலம் நீரைப் பெறுகையில் குடிதண்ணீர்க் கிணற்றைக் கடற்படை கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
எங்கெங்கு புதைகுழிகள் உள்ளதோ அந்த இடங்களை அடையாளப்படுத்தி தங்களுடைய புத்த கோயிலைக் கட்டுகின்றனர். இவை பற்றிய தகவல்கள் முன்கூட்டியே தெரிந்தும், அரசாங்கத்தில் வேலை செய்யும் தமிழ் அதிகாரிகளும் கையறு நிலையிலுள்ளனர்.
இன்றும் தமிழ்ப் புலனாய்வாளர்கள் இங்குள்ளனர். அவர்களுக்கு நன்கு சிங்களம் தெரியும். ஆகவே இவை பற்றி அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் கூற வேண்டும்.
வேறு நாடுகளிலெல்லாம் இவ்வாறான நிலைமைகள் இருந்தாலும் இங்கு எதிர்த்துக் கதைத்தால் வேலை பறிபோகும் நிலையுள்ளது. சரத் வீரசேகர நீதித் துறையைத் தூக்கி எறிகின்றார்.
தமிழர்களின் பொருளாதாரத்தை வளர்க்கும் விடயங்களை இல்லாமல் செய்யும் நிகழ்ச்சி நிரலே காணப்படுகின்றது.
வடக்கு கிழக்குப் பகுதிகள்
அதுவும் வடக்கு கிழக்கில் சாதுரியமாக நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளனர். நாங்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தாது விடின் தங்கள் நடவடிக்கைகளைச் சாதுரியமாக முன்னெடுப்பார்கள்.
வருகின்ற கிழமை கனேடியத் தூதுவர் இங்கு வரும் பொழுது அவர்களுக்கு இவ் இடங்களைக் காண்பிக்கும் தருணமே இவை. சர்வதேச ரீதியாக எடுத்துச் செல்ல வழிகாட்டும்.
எனவே ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரல் தற்போதைக்கு முடிவடையாத நிலையுள்ளதால், வடக்கு கிழக்குப் பகுதிகள் போராட்ட களமாக மாற்றப்பட்டுத் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி: கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









