இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழில் போராட்டம் (VIDEO)
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணியளவில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ். மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்த படகுகளைப் விடக்கூடாது, எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
போராட்டத்தின் காரணமாக ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகம் சில மணிநேரம் முடங்கியிருந்ததுடன் வீதியூடான போக்குவரத்து முடங்கியது.
இதனையடுத்து போராட்ட இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), தான் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததை அடுத்து தாங்கள் போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து ஊடகங்களிடன் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன்,
வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்.
இன்று யாழ். மாவட்ட மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் நேரடியாக வருகை தந்து சில உறுதிமொழிகளை அளித்து இந்த போராட்டத்தினை நிறுத்தியுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
மீனவர்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை கடற்றொழில் அமைச்சர் நிறைவேற்ற வேண்டும். அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்க தயார்.
ஆனால் மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பொய்யாகவோ அல்லது நிறைவேற்றாவிட்டாலோ நாங்கள் கடற்றொழில்அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை வரும் என்றார்.
you my like this video







