இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்னால் போராட்டத்தில் இறங்கிய மக்கள் (Photos)
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களது குடும்பத்தினரால் தாக சாந்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - ஊரணி சந்தியில் இன்று பகல் 12.30 மணியளவில் இந்த நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது.
இதன்போது பாலசுந்தரத்தின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஆத்ம சாந்திக்கான மௌன பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது. பாலசுந்தரம் கடந்த வருடம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டு வாசலுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் பாலசுந்தரத்தின் பெற்றோர் தனது மகனுக்கான நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என்றும் கொலை செய்த குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றையதினம் இந்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் தனது மகனின் பிறந்த தினத்தை முன்னிட்டு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனது மகனின் கொலை தொடர்பாகப் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்த பாலசுந்தரத்தின் தந்தையர் இன்று வரை தனது மகனின் கொலைக்கு நீதியான விசாரணை கிடைக்கவில்லை என ஆதங்கம் வெளியிட்டார்.
படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்திற்கு மறுக்கப்பட்ட நீதியே உள்ளதாகவும் அவரது படுகொலை தொடர்பில் பொலிஸார் சரியான விசாரணைகளை முன்னெடுக்காத காரணத்தினால் அந்த விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறையினை விசாரணை செய்யவேண்டும் என பாலசுதந்திரத்தின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர்
க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி
தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், அரசியல்வாதிகள், பொதுமக்கள் குடும்பத்தினர் என
பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








