பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக, போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டமானது இன்று காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வ.பிரபாகரன் (V.Pirabagaran) ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றது.
தேசிய வீடமைப்பு சபையினால் 2019ம் ஆண்டு 7 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது. அதில் ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா மட்டுமே கிடைக்கப்பெற்றது.
தற்போது வீடமைப்பு அதிகாரசபை ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டத்தினை வழங்குகின்றது.
எனவே எங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தினை தடை செய்துள்ளார்கள். அதனால் விவசாயிகள் பல இன்னல்களை எதிர்நோக்குக்குகின்றனர்.
எனவே விவசாயிகளுக்கு தேவையான உரத்தினை பெற்றுக் கொடுக்கவேண்டும்.
எமது நாட்டில் கால்நடை வளர்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழிலாக கருதப்படுகிறது. கால்நடைகளுக்கான தீவனங்கள் 50கிலோ ஆயிரத்து எண்ணூறு ரூபாசிற்கு விற்கப்பட்ட நிலையில் அது தற்போது ஐயாயிரமாக ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
எனவே இந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது வீட்டுத் திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தியவாறு தமது கண்டனங்களை வெளியிட்டனர்.
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் தம்மால் இயலாத விடத்து பொறுப்பானவர்கள் உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் இதன்போது குறிப்பிட்டனர்.
குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை வடமாகாண ஆளுநர் ஊடாக பிரதமருக்கும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும், தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கும் வழங்கவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.





