சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் பிரதேச செயலகத்திற்குள்ளும் அமைதியான முறையில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டமானது, மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று(25.05.2026) செங்கலடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள்
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இந்த கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் , ஞா.சிறிநேசன் செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் ஏறாவூர்ப்பற்று மற்றும் ஏறாவூர் நகர சபைகளின் தவிசாளர்கள் , திணைக்கள அதிகாரிகள், விவசாயி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, சட்ட விரோத கசிப்பு உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சிலர் பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரதேச செயலக கூட்ட மண்டபத்திற்குள் நுழைந்து பதாதைகளை கையில் ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் உள்ளிட்டோரிடம் கையளித்துள்ளனர். ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமான முறையில் மதுபான உற்பத்திகளை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டதுடன், இந்த சட்ட விரோத கசிப்பு உற்பத்திகளை தடுப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் விசேட பொலிஸ்குழுக்களை ஏற்படுத்தி நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும், இது தொடர்பில் செயற்படும் பொதுமக்களுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதை தொடர்ந்து, பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
அத்துடன், பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
