வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (29.12.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர் சமாசத்திற்குட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இரண்டு படகுகள் வெளி இணைப்பு இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டன.
குற்றச்சாட்டு
அந்தப் படகுகள் முன்பாக சமாச நிர்வாகத்தினரின் கலந்துரையாடலின் மூலம் தெரிவு செய்து வழங்கப்பட்டு வந்தன. இந்த படகு வழங்கலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல சங்கங்களின் பிரதிநிதிகள் தொடர் குற்றச்சாட்டை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாக வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு மக்கள் பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

முறைகேடு
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட இரு படகுகள் தொடர்பில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இரு படகுகளையும் நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் ஏலத்தில் விட்டு விற்று அதன் பெறுமதியான 18 இலட்சம் ரூபாவை பக்கச்சார்பாக ஒரு சிலருக்கு மட்டும் பகிர்ந்தளித்துள்ளனர். இது தொடர்பாக சங்க அங்கத்தவர்கள் எங்களுக்கு அறிவிக்கவில்லை. இது மாபெரும் மோசடி.
கோரிக்கை
இதற்கு சமாசமும் துணை போயுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்திருக்கிறோம். பிரதேச செயலருக்கும் கடிதம் ஒன்றை கையளிக்கிறோம். உரியவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு தமக்கு நீதியை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர்.
இதன்போது போராட்டக்காரர்களை சந்தித்து வழங்கப்பட்ட கடிதத்திற்கு உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு விரைவில் தீர்வு வழங்குவதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் உறுதியளித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |