யாழில் காணியுரிமை கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (Video)
காணி அபகரிப்புக்கு எதிராக யாழ். வலி வடக்கில் முன்னெடுத்து வருகின்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொல்லிப்பழை பிரதேச சபைக்குள் ஊள்நுழைந்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ். வலி வடக்கு மக்களின் காணி அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம் தற்போது தீ வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் காணி அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டமானது தெல்லிப்பழை சந்தியிலிருந்து தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலக வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், சிவில் சமூகத் தலைவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழில் மக்களின் காணி அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (02.11.2022) இந்த கவவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.
சிங்கள அரச பேரினவாதம் அடாவடியாக நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக்கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலே எங்களுடைய காணிகள் , நிலங்கள்
அபகரிக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் கடந்த 74 வருடங்களாக நடைபெற்றுவருகின்றது.
இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வலி வடக்கிலே பொதுமக்களுடைய காணிகளை அபகரித்து அரசாங்க இயந்திரங்கள் தங்களுடைய செயற்பாடுகளுக்கு பயன்படுத்துகின்ற செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரவு
இந்த போராட்டத்தில் எமது நிலம் எமக்கு வேண்டும், எமது தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து போன்ற பதாகைகளை ஏந்தியும் இராணுவமே வெளியேறு என்று கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







