நுவரெலியாவில் மேலதிக கொடுப்பனவு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள்
நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவை கொடுக்குமாறு கோரி மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த எதிர்ப்பு போராட்டமானது, கடந்த புதன்கிழமை 27ஆம் திகதி முதல் இன்று வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 900இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தின் முதல் நாள் தொழிற்சாலைக்கு உள் நுழைவாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலதிக கொடுப்பனவு
இரண்டாவது நாள் பிரதான வீதியோரம் அமர்ந்து எதிர்ப்பு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய நிலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது, “இதற்கு முன்னர் ஆடைத் தொழிற்சாலையில் வருடக்கணக்கிற்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டிருந்த நிலையில் கோவிட் - 19 தொற்று நோய் நிலவிய காலப் பகுதியில் மாத்திரம் வழங்கப்படவில்லை.
இவ்வருடம் ஆரம்பத்தில் தொழில் செய்யும் போது அனைவருக்கும் முழுமையான மேலதிக கொடுப்பனவினை வழங்குவதாக தெரிவித்ததாகவும் தற்போது தொழில் செய்ததற்கான சம்பளம் கூட வழங்கப்பட போவதில்லை என நிறுவனம் தெரிவித்ததுள்ளது.” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி
இந்நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, ஆடை கைத்தொழிற்சாலையில் வணிக நடவடிக்கை குறைவாக காணப்படுவதால் போதியளவு இலாபத்தினை ஈட்ட முடியாதுள்ளதென ஆடைத்தொழிற்சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, வருடாந்தம் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவில் இம்முறை வழங்கமுடியாதுள்ளது எனவும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் 100% இல் 50%இனை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |