தேசிய வளங்கள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம் (Video)
தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இன்றைய தினம் கொழும்பு,கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் தொழிற்சங்கத்தினர் இலங்கை மின்சார சபை முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டு, கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பேரணி காரணமாக கோட்டை தனியார் பேருந்து நிலையம் தொடக்கம், கோட்டை புகையிரத நிலையம் வரை கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த தொழிற்சங்கததினர் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இலங்கை ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்று ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் மகஜரை கையளிக்க முயன்ற சந்தர்ப்பத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடும் ஏற்பட்டது.
இதன்போது பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சார ஒன்றிணைந்த அமைப்பு ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் கருத்து தெரிவிக்கையில்,
நீங்கள் இதனை மீளப்பெற வேண்டும். எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கி, எண்ணெயை விநியோகிக்கும் ஏகபோக உரிமையை இந்தியாவின் பல நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
இதனால்தான் நாம் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தோம். எதுவும் இடம்பெறவில்லை.திருட்டுத்தனமாக செய்த ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியாதாம். இது மிக ஆபத்தான விடயம்.
எங்கள் வியர்வையால், இரத்தத்தால் உருவானது. அதனை விற்பனை செய்ய அனுமதிக்கமாட்டோம். நாங்கள் எங்கள் இறுதித் தீர்மானத்திற்கு முன்னதாக நாம் உங்களிடம் இந்த மகஜரை கையளிக்கின்றோம்.
மீளப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் உங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தாய்நாட்டிற்கு செல்லுங்கள்.கோட்டாபய மற்றும் பசிலுக்கு வேறு நாடுகள் காணப்படுகின்றன.
எமக்கு வேறு நாடுகள் இல்லை. மரம் கொத்தி வாழை மரத்தை கொத்தியுள்ளது. பிரச்சினை எமக்கில்லை. உங்களுக்குத்தான்.நாட்டின் மிக முக்கியமான மூன்று இடங்களில் அரசாங்கம் கைவைத்துள்ளது. இது நல்லதுக்கு அல்ல.
நாங்கள் மகஜரை கையளித்து இரண்டு மூன்று நாட்கள் மாத்திரமே நாம் பொறுமை காப்போம்.அதன் பின்னர் எங்களது மிகப்பெரிய வேலை நிறுத்தத்தை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம் என்பதை கூறிக்கொள்கின்றோம்.