அம்பாறையில் இலங்கை மின்சார சபையிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து பாரிய போராட்டம் (Video)
அம்பாறையில் இலங்கை மின்சார சபையிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லங்கா சூரிய சக்தி சங்கத்தினால் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் கல்முனை மின் பிராந்தியத்திலுள்ள சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களால், இன்றையதினம் (12.04.2023) கல்முனை மின்சார சபை காரியாலயத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு Roof top Solar உற்பத்தியாளர்களின் கொடுப்பனவுகள் நீண்ட கால நிலுவையில் உள்ளதாகவும், தற்காலத்தில் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளுமாறும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக கல்முனை பிராந்தியத்தில் மாத்திரம் சுமார் 13 மெகாவாட்டிற்கும் அதிகமாக இலங்கை மின்சார சபைக்கு இந்த சங்க உறுப்பினர்கள் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.

அதேபோன்று ஒவ்வொரு மாதமும் இலங்கை மின்சார சபையிடமிருந்து 40 மில்லியனுக்கு அதிகமான ரூபாவினை ஒதுக்க வேண்டிய தேவையும் உள்ளது.
மேலும் முழு கிழக்கு மாகாணத்திற்கும் ஒவ்வொரு மாதமும் 70 மில்லியனுக்கு மேல் பணம் இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டி இருக்கின்றது.
போராட்டக்காரர்களின் முறைப்பாடுகள்
ஒன்பது மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள Roof top Solar உற்பத்தியாளர்களின் கொடுப்பனவினை தாமதம் இன்றி இலங்கை மின்சார சபை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அதிகரித்த பணவீக்கம் மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக தற்போது வழங்கப்படும் 22 ரூபாய் கொடுப்பனவை புதிய விலையேற்றத்திற்கு ஏற்றாற்போல் திருத்தம் செய்யவும் முறைப்படுத்தப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக தொடராக கொடுப்பனவை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் போராட்டக்காரர்கள் இதுகுறித்த மனு ஒன்றையும் இலங்கை மின்சார சபை பிராந்திய பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஹைக்களிடம் கையளித்துள்ளனர்.







