மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்! காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என தமிழர் தாயக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வவுனியாவில் நேற்று (18.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவலை
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக குடும்பங்களை அழைத்து, ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு வருமாறு கோருவது குறித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளான நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

மேலும், கிராம சேவகர் அதிகாரிகள் மூலம் குடும்பங்களைத் தொடர்புகொண்டு நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் சில குடும்பங்கள் அச்சுறுத்தப்பட்டதாக அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாக தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டாயப்படுத்தக்கூடாது
எந்த கிராம சேவகர் அதிகாரியோ அல்லது வேறு அரச அதிகாரியோ காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஓஎம்பி கூட்டத்திற்குச் செல்லவோ, மரணச் சான்றிதழை ஏற்றுக் கொள்ளவோ, வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கவோ அச்சுறுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது என தெரிவித்துள்ளனர்.