அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி விரட்டியடித்த மக்கள் (Video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சிலாபம் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் வேறு சிலருக்கு இடையில் ஏற்படவிருந்த மோதலை பொலிஸாரும், இராணுவத்தினரும் தலையிட்டு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சனத் நிஷாந்த உட்பட ஆளும் கட்சிக்கு ஆதரவாளர்கள் சிலாபம் நகரில் இருந்து புத்தளம் நகரை நோக்கி பேரணியாக சென்ற போது, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி கோட்டாபயவை ராஜினாமா செய்ய கோரும் எதிர்ப்பு போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையில் மோதலான நிலைமை உருவானது.
பொதுஜன பெரமுனவின் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் சிலாபம் நகரில் பதற்றமான நிலைமை காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
சிலாபம் - அலாவத்த பகுதியில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மக்கள் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தலைமையிலான ஆர்ப்பாட்ட குழுவே இவ்வாறு பொது மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
இந்த நிலையில் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் மழை, வெயில் பாராது மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



