மட்டக்களப்பில் பொதுமக்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு இடையூறளித்த குழுவினர்
மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் மாநகரசபை மேற்கொண்டுள்ள விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீதியில் உள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தியஸ்தர் வீதியில் வைத்தியசாலை மதில் ஓரமாக மாநகர சபை தற்காலிக கொட்டகை அமைத்து வாகன தரிப்பிடமாக்கி அதனை குத்தகைக்கு வழங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த வாகன தரிப்பிடத்தை, மேலும் வீதிபகுதியை ஆக்கிரமித்து தற்காலிக கொட்டகை அமைத்து விஸ்தரிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
பல்வேறு அசௌகரியங்கள்
இந்த விஸ்தரிப்பு நடவடிக்கையால் அந்த வீதியில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டிவரும் அபாயகரமான நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த விஸ்தரிப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு அந்த வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகரசபை, உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம்மூலம் அறிவித்துள்ளனர்.
ஆனால் அந்த விஸ்தரிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் அந்த அடக்கு முறைக்கு எதிராக பொது மக்கள் நேற்று காலை 11.00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, அங்கு ஒன்று கூடிய பெண்களை அங்கு வந்த அராஜக கும்பல் ஒன்று அச்சுறுத்தல் விடுத்த நிலையில் ஒன்று கூடியயவர்களில் சிலர் அங்கிருந்து வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்கிருந்த ஏனைய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.