மதுஷ்க ஹரிஷ் கடத்தப்பட்டமைக்கு நீதி வேண்டும்: கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதுஷ்க ஹரிஷ் டி சில்வா வெள்ளை வானில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நீதிக்காக எழுந்து நிற்போம் எனும் தொனிப்பொருளில் இன்று(05.09.2023) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான கோட்டாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் நாட்டில் அதிகளவான வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
எனது தந்தை எங்கே
இந்த காலப்பகுதியான கடந்த 2013 ஆம் ஆண்டு மதுஷ்க ஹரிஷ் டி சில்வா எனும் நபரும் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக அவரது மனைவி மயூரி இனோக்கா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதுஷ்க ஹரிஷ் டி சில்வா காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தி இன்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமது கணவர் காணாமல் ஆக்கப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், அது தொடர்பான முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மயூரி இனோக்கா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
எனது தந்தை எங்கே? யார் அவரை கொண்டு சென்றது? போன்ற பல பதாகைகளை ஏந்திய வண்ணம் மதுஷ்க ஹரிஷ் டி சில்வாவின் குழந்தைகளும் இந்த நீதி கோரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.