யாழில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு எரிக்கப்பட்ட சுமந்திரனின் உருவ பொம்மை
யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வல்வெட்டித்துறை குருநகர் பகுதி உள்ளூர் இழுவைமடி தொழில் செய்யும் மீனவர்கள் சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்க முன்றலில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டு, மீனவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, போராட்டத்தின் முடிவில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு தடிகளால் மீனவர்கள் தாக்குதலையும் மேற்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - குருநகரில் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
உள்ளூர் இழுவை மடி தொழில் தடை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வண்ணமே குருநகர், வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகளை கட்டி ஹர்த்தாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





