வறிய மக்களின் உதவித்திட்டத்தில் இடம்பெறும் முறைகேடுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (Photos)
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (27.06.2023) மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில்;
இதற்கு பதிலாக வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா பிரதேச செயலக வளாகத்திற்குட்பட்ட கள்ளிக்குளம், தேக்கவத்தை, நெளுக்குளம், தோணிக்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களே தமக்கு நீதி கோரி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் போராட்ட இடத்திற்கு சென்று கேட்டறிந்ததுடன், முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தாம் நியாயமான முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொது மக்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும், வவுனியா பிரதேச செயலாளரின் தீர்வு தமக்கு திருப்தியில்லை என தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர கலந்துரையாடியதுடன், மக்களின் கோரிக்கையினை கேட்டறிந்து கொண்டார்.
இது தொடர்பில் மக்களிடம் தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் ஆரம்ப பட்டியல் மாத்திரமே இது. இறுதிப்பட்டியல் இது வரை வெளியாகவில்லை.
இது தொடர்பில் முறைப்பாடுகளை இணையம் மூலம் மேற்கொள்ள முடியும்.
அல்லது கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு எமது உத்தியோகத்தர்கள் வருகை தருவார்கள். அவர்களிடம் வழங்குமாறும், கிராமத்திற்கு உத்தியோகத்தர்களின் விஜயம் தொடர்பான திகதி வெளியிடப்படும், அதன் பின்னரே இறுதி பட்டியல் வெளியிடப்படும் எனவும் அரசாங்க அதிபர் உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றிருந்தனர்.
குறித்த போராட்டம் காரணமாக ஏ9 வீதி மற்றும் வவுனியா- மன்னார் ஆகிய இரு பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் 2 மணித்தியாலயம் 30 நிமிடங்களாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தமையுடன் மாற்று வீதிகள் ஊடாக போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
யாழில் அரசாங்கத்தின் நலன்புரி உதவித்திட்ட பதிவுகளில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து பொதுமக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (27.06.2023) கோப்பாய் பிரதேச செயலகம் முன்பாக கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
செய்தி- கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |












செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 11 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
