சரத் வீரசேகரவிற்கு எதிராக ஆர்பாட்டத்தில் குதித்த சட்டத்தரணிகள் (Video)
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்புக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தினையும் முன்னெடுத்துள்ளனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (11.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வின் கருத்தைக் கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தலைமையில் இன்றைய தினம் (11.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட தொகுதியில் உள்ள நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் வழக்குகளில் பங்குகொள்ளாது சட்டத்தரணிகள் பணிபகிஸ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
அதனைத் தொடர்ந்து நீதிமன்றிலிருந்து பேரணியாக வந்து நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்திற்குக் குரல்கொடுப்போம், இனவாதத்தைக் கக்காதே, நீதித்துறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூணாகும், நீதித்துறையில் இனவாதத்தைக் கக்காதே, நீதித்துறையினை அச்சுறுத்தாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட மும்மொழிகளிலுமான பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்குக் கடுமையான கண்டனங்களைச் சட்டத்தரணிகள் முன்வைத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற சிறப்புரிமையினை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் தெரிவித்த கருத்தானது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு முற்றுமுழுதான பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி: குமார்
மன்னாரில் ஆர்ப்பாட்டம்
சரத் வீரசேகர வின் கருத்தைக் கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (11.07.2023) காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சமூகமளித்த சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்ததோடு, முல்லைத்தீவில் இடம் பெறும் போராட்டத்திலும் கலந்து கொள்ள முல்லைத்தீவிற்கு சென்றனர்.
இன்றைய தினத்துக்கான வழக்கு விசாரணைகள் பிறிதொரு தினத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது.
மேலதிக செய்தி: ஆஷிக்
யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாகத் தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் இன்று (11.07.2023) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது இருக்கத் தீர்மானித்ததாக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்துள்ளார்.
சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றிலில் அடையாள கண்டனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கண்டனப் பேரணியில் எமது சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ். சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாது இன்று (11.07.2023) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக இன்றைய வழக்கு விசாரணைகள் தவணையிடப்பட்டன.
தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில்
நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலதிக செய்தி: தீபன் , கஜிந்தன்
பருத்தித்துறையில் பணி புறக்கணிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாகத் தெரிவித்த கருத்தினைக் கண்டித்து இன்றைய தினம் (11.07.2023) பருத்தித்துறை நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சேகர வீரசேகர நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை, மற்றும் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்தமையே கண்டிப்பதாகவும் பருத்தித்துறை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சட்டத்தரணி நடராசா ராஜீவன் தெரிவித்துள்ளார்.
இதனால் இன்றைய தினம் இடம் பெறவேண்டிய அனைத்து வழக்குகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளன.
மேலதிக செய்தி: காண்டீபன், பிரதீபன்
கல்முனையில் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாகத் தெரிவித்த கருத்தினைக் கண்டித்து இன்றைய தினம் (11.07.2023) கல்முனை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
மேலதிக செய்தி: ராக்கேஷ்
முல்லைத்தீவு ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாகத் தெரிவித்த கருத்தினைக் கண்டித்து இன்றைய தினம் (11.07.2023) முல்லைத்தீவு நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதன்போது சரத்வீரசேகரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள்-புலனாய்வாளர்கள் தீவிர கண்காணிப்பு ஒளிப்படம் எடுத்துள்ளனர்.
மேலதிக செய்தி: கீதன்





























