நியூயோர்க்கில் புலம்பெயர் தமிழரின் போராட்டம்: ஐ.நா சபையிலிருந்து பின்வழியால் வெளியேறிய ரணில்
நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக ஐ.நா சபையை விட்டு ரணில் பின்வழியால் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பதை எதிர்க்கும் விதமாக ஐ.நா முன்றலில் பெரும் திரளான தமிழ் மக்கள் தமிழீழத் தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் தலைமையில் நேற்றையதினம் (21.09.2023) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு தலைமை தாங்கிய உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழர்களை ஏமாற்றுவதற்கான சதித்திட்டம்
நிரந்தர அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும் கூறியது மட்டுமல்ல இலங்கையின் உண்மைக்கும், நீதிக்குமான ஆணைக்குழு தமிழர்களை ஏமாற்றுவதற்கான சதித்திட்டம் இது.
மேலும் பெளத்த மயமாக்கல் , சிங்களக் குடியேற்றம் ஆகியவற்றில் ஐ. நா தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போராட்டத்தின் போது, "தியாகி திலீபனின் ஊர்தியை சிங்கக் கொடி கொண்டு அடித்து நொருக்கிய சிங்கள பெளத்த இனவெறி அரசு வெளியேறு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? ரணில் ஐ.நாவுக்கு வருவது ஐ.நாவுக்கு அவமானம், இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து" போன்ற கோசங்கள் மக்களால் எழுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.