நுவரெலியாவில் மீண்டும் pickme எதிராக போராட்டம்
நுவரெலியா Pick Me செயலிக்கு எதிராக சாரதி சங்கத்தினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் கையெழுத்துக்களை சேகரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (26) நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா - பதுளை பிரதான வீதியூடாக வாகனங்களில் கருப்பு கொடி பறக்கவிட்டு வாகனத்தில் பேரணியாக பிரதான நகரை சுற்றி வந்து அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கோரிக்கைகள் அடங்கிய மகஜர்
இறுதியில் தங்களுடைய கையெழுத்துக்களுடனான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் , நுவரெலியா மாநகரசபை முதல்வருக்கும் நுவரெலியா தலைமை பொலிஸ் பரிசோதகருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,
Pick Me’ நிறுவனத்தின் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோர் நுவரெலியாவிற்கு , வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து இறக்கி விட்ட பின்னர் மீண்டும் நுவரெலியாலிருந்து செல்லும் போதும் Pick Me செயலி மூலம் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன.
Pick Me நிறுவனத்தின் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோர் நுவரெலியாவிற்கு, வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து இறக்கிவிட்ட பின்னர் மீண்டும் நுவரெலியாலிருந்து செல்லும்போதும் Pick Me செயலி மூலம் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர்.
நுவரெலியாவில் ஆரம்பத்தில் Pick Me செயலி பாவனை குறைவாக காணப்பட்டது. ஆனால் இப்போது அனைவரும் நிரந்தரமாக பாவனை செய்கின்றனர்.
குறிப்பாக சுற்றுலா பயணிகளும் மற்றும் பொது மக்களும் அதனை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு செயற்படுபவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றோம்.
தொடரும் போராட்டங்கள்
மேலும், நுவரெலியா சுற்றுலாவிற்கு ஒரு பிரதான தளமாகும். இங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களிடம் Pick Me செயலி மூலம் இரகசியமான முறையில் பணம் பரிமாற்றம் செய்து ஏற்றி செல்கின்றனர்.

அத்துடன் கூடிய தூரத்திற்கு, குறைந்தளவு பணத்தை வாங்கிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள் இது போன்று செய்தால் காலை முதல் இரவு வரை இந்த தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கருப்பு கொடிகள் பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வரையில் தொடர்ச்சியாக எதிர்வரும் நாட்களில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக நுவரெலியாவில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

