நோர்வூட்டில் புதிய மதுபானசாலைக்கு எதிராக போராட்டம்!
நோர்வூட்- பொகவந்தலாவ வீதியில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் இன்று (06.05.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, கட்டிடத்திற்கு முன்பாக, தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் கருப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது நோர்வூட் பிரதான நகரில் உள்ள அனைத்துக் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அனைத்துக் வர்த்தக நிலையங்களில் கருப்புக் கொடிகள் ஏற்றி இருந்தனர்.
போராட்டம்
குறிப்பாக நோர்வூட் நகரில் தற்போது 3 மதுபானசாலைகள் உள்ளதாகவும், மற்றொரு மதுக்கடை திறக்கப்படுவது தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அப்பகுதி மக்களுக்குப் பல பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் இதனை உடனடியாக நிறுத்த கோரியும் பிரதேசவாதிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் மதுபானசாலை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் ஒரு தனியார் வகுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும், மதுபானசாலை திறக்கப்படுவது அந்த வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
புதிய மதுபான உரிமங்களை வழங்கப் போவதில்லை என தற்போதைய அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும், புதிய மதுபானக் கடைகளைத் திறக்க உரிமங்களை வழங்குவதன் மூலம் தற்போதைய தலைமுறையினரும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள் என்றும் மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
இதன் போது மக்கள், பதாகைகளை தாங்கியும் மதுபான சாலை நிறுத்த கோரியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நாங்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சியிடன் வினவிய போது, தேவையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நோர்டன் பிரிட்ஜில் உள்ள ஒரு மதுபானசாலையினை நோர்வூட் நகரத்திற்கு மாற்றுவதற்கு கலால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
அத்தோடு, மதுபானசாலை திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு இருந்தால், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.






நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam