இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்நிறுத்தத்திற்கு எதிராகப் போராட்டம்
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியால் எட்டப்பட்ட 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு இஸ்ரேலின் கிரியாத் ஷ்மோனா (Kiryat Shmona) பகுதி மக்கள் ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லெபனான் எல்லையோர நகரங்களில் வசிக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்டோர், ஹிஸ்புல்லா இன்னும் ஆயுதங்களைக் கைவிடாத நிலையில் இந்த போர்நிறுத்தம் தங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
போர்நிறுத்தம்
"எங்கள் தலைக்கு மேல் தொங்கும் இந்த அச்சுறுத்தலை நிரந்தரமாக நீக்க வேண்டிய தருணம் இது" என கிரியாத் ஷ்மோனா மேயர் அவிச்சாய் ஸ்டெர்ன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைமுறையிலுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை ஈரான் "பாரிய அளவில் மீறியுள்ளதாக" ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் சனிக்கிழமை ஈரானியப் படைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் புதன்கிழமைக்குள் ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கை எட்டப்படாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அமெரிக்கா தரைமட்டமாக்கும் என எச்சரித்துள்ளார்.
"இனி மென்மையாக நடக்க முடியாது" எனத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாளை திங்கட்கிழமை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஈரான் அதிகாரிகளுடன் மீண்டும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளார்.