எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக நாட்டில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் (Photos)
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதன் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் தனியார் பயணிகள் பேருந்துகளை சேவையில் இருந்து விலகிக்கொண்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலையில் நாட்டின் பல பிரதேசங்களில் தனியார் பயணிகள் பேருந்துகளை சேவைகளில் இருந்து விலகிக்கொண்டதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை காலி நகரில் காலி- கொழும்பு - மாத்தறை பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது. காலி நகரில் நடத்தப்படும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
காலியில் மாத்திரமல்லாது, எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஹிங்குரக்கொடை, பத்தேகம, திகணை, மாதம்பை, கம்பளை, கண்டி, கேகாலை, மத்துகமை, நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.



