ஹப்புத்தளையில் சவப்பெட்டி ஏந்தி அரசுக்கு எதிராக கோஷமிட்ட மக்கள்
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்(Vadivel Suresh) தலைமையில், ஹப்புத்தளை நகரில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடர்பாகவும், பெருந்தோட்ட கம்பனிகளின் அடாவடி நிர்வாகத்திற்க்கு பதிலடி தரும் நோக்குடனும், உரத்தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதுகாக்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படடுள்ளது.
இதன்போது, ஒப்பாரி வைத்தும், சவப்பெட்டியை ஏந்தியும் போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
இதன்போது கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்,
"அனைத்து வளங்களும் நிறைந்த நம் இலங்கை திருநாடு இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றது.
குழந்தைகள் குடிப்பதற்கு பால் மா இல்லை, அரிசி தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு, பெருந்தோட்ட மக்கள் தேயிலை கொழுந்தை உண்ண வேண்டிய அவல நிலை. மேலும் 1000 ரூபாய் சம்பளம் என்ற கபட நாடகத்தில் சிக்கித் தவிக்கின்ற பெருந்தோட்ட மலையக மக்களை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கின்ற பெருந்தோட்ட நிர்வாகங்கள். பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.
மலையக மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக்கொள்ள இன்று வீதிக்கு இறங்கி இருக்கின்றோம் இது முடிவல்ல ஆரம்பம்" என தெரிவித்துள்ளார்.






