அரசாங்கத்தை எதிர்த்து பொது ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக எச்சரிக்கை
கொழும்பில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த கட்டடங்களை வெளிநாட்டினருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் இதனை எதிர்த்து பொது ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி வங்கி தொழிலாளர் சங்கங்களில் ஒன்று அரசாங்கத்திற்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு விற்கப்பட்ட அரச சொத்துக்களை மீளப் பெறுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், நிதி அமைச்சின் கீழ் செலந்திவா என்ற நிறுவனத்தை அமைத்து வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த பல கட்டடங்களை கையகப்படுத்த அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு பொது தபால் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு கட்டடம், இலங்கை வங்கியின் யோர்க் வீதி கட்டடம், ஹில்டன் ஹோட்டல், ஹைட் கட்டடம் மற்றும் கபூர் கட்டடம் ஆகியவற்றை முதல் கட்டமாக கையகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1955ஆம் ஆண்டு இலங்கை வங்கியால் கொள்வனவு செய்யப்பட்ட யோர்க் வீதி கட்டடம், 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை வங்கியின் தலைமை அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக, இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கட்டடம் வங்கிக்கு சொந்தமானது என்றாலும், இது தொல்பொருள் மதிப்புடன் கூடிய, முழு தேசத்தின் பெருமையின் அடையாளமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்டடங்களில் பெரும்பாலானவை காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட பழங்கால கட்டடங்களாகும்.
கொழும்பு கோட்டை பகுதியின் பொருளாதார மையங்களையும், சிறந்த வரலாற்று, கலாச்சார மற்றும் தொல்பொருள் மதிப்புள்ள கட்டடங்களையும் தனியார் துறைக்கு அல்லது சர்வதேச முதலீட்டாள்களுக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை மாற்றியமைக்குமாறு தொழிற்சங்கம் பிரதமருக்கு அறிவித்துள்ளது.
மேலும், இது குறித்து மதத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு தெளிவுபடுத்துவதற்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி, நாட்டின் மதிப்புமிக்க பொதுச் சொத்தை இவ்வாறு சுரண்டுவதற்கும் விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒன்று திரளுமாறு, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.



உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
