கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக மன்னாரில் போராட்டம்
கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக மன்னாரில் அமைதி கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் மதத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக சிறுபான்மை இன மக்களின் மரணத்திற்கு இறுதி மரியாதை கொடு, ஜனாதிபதி அவர்களே எங்களது ஜனாசாவை புதைக்க அனுமதி தாருங்கள், ஜனாசாவை பலாத்காரமாக எரிப்பதை நிறுத்து, இனவாத தீ அணையட்டும் இன்றுடன், பிறக்கும் தையோடு தீ வைப்பதை முடித்து விடு, எமது நாட்டில் சிறுபான்மை மக்களின் உரிமையைப் பறிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கண்டன போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று ஜனாதிபதிக்குக் கொடுக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினிஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.




