கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலையில் பெரும் சர்ச்சை! - மாணவிக்கு நடந்தது என்ன? (Video)
கொழும்பு 4 இல் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் அதிபர் மற்றும் அங்கு பணியாற்றும் கல்வி சாரா ஊழியர் ஒருவருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை அந்த பாடசாலையில் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர் ஒருவர் விடுதிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும், அந்த கல்வி சாரா ஊழியருக்கு எதிராக இது வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அந்த ஊழியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த பாடசாலையில் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லையென தெரிவித்த பெற்றோர்கள், பாடசாலையில் பணியாற்றும் அனைத்து ஆண் ஊழியர்களையும் நீக்கிவிட்டு பெண் ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், பாடசாலை வளங்களை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் பேசுவதற்கும், பாடசாலைக்குள் பிரவேசிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மாணவியின் தந்தை மறுப்பு.....
இந்த நிலையில், குறித்த சம்பவத்தை மாணவியின் தந்தை மறுத்துள்ளார். பாடசாலையின் அதிபர் மற்றும் குறித்த கல்வி சாரா ஊழியர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ள அவர், தனது மகளின் கல்வி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவினர் மாணவியின் தந்தையிடம் தொடர்புகொண்டு பேசியிருந்தனர். குறித்த பாடசாலையில் ஆசிரியர்கள் சிலர் அதிபரை பதவி விலக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படுவதாகவும், அதற்கு தனது மகளின் விடயத்தை பயன்படுத்திக்கொண்டதாகவும் கூறினார்.
துஷ்பிரயோக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கல்வி சாரா ஊழியரை தனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும் என தெரிவித்த அவர், சிறு வயது முதல் தனது மகளை நன்கு அறிந்தவர் என குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பாடசாலையில் தனது மகளிடம் இருந்து கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, பாடசாலையிலிருந்த இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் தனது மகளின் கல்வி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு தரப்பாக மாறிய பெற்றோர்கள்.....
இந்த போராட்டத்தின் போது பெற்றோர்கள் இரு தரப்பாக மாறியிருந்தனர். ஒரு தரப்பினர் அதிபருக்கு ஆதரவாக பேசியதுடன், மற்றைய தரப்பினர் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பாடசலையின் அதிபர் சிறப்பானவர் எனவும், பாடசாலைக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் அங்கிருந்த ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டனர்.
அரச அதிகாரிகள் தகவல் தர மறுப்பு.....
இந்த சம்பவம் தொடர்பில் வலய கல்வி பணிமனை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்ட போதும், இந்த சம்பவம் தொடர்பில் உரிய பதில் வழங்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri