கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் - பாரத் அருள்சாமி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (14.10.2024) இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“கண்டி வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறி அவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிக் கொண்டாலும், இறுதியில் தங்களுடைய சுய இலாப அரசியலையே அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
பாரிய சவால்
இதனால், கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கான ஒரு குரலாக இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கு எனக்கு பூரண ஆதரவை நீங்கள் வழங்குவீர்கள் என முழு நம்பிக்கையுடன் இந்த பொதுத் தேர்தலிலும் போட்டியிடுகின்றேன்.
அத்துடன், கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு இம்முறை பாரிய சவால் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு.
ஆதலால், நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்களார்களான நீங்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |