நீர்ப்பாசன திட்டங்களை ஏற்படுத்தி விளைநிலங்களை அதிகரிக்கும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்! - வடக்கு மாகாண ஆளுநர்
நீர்ப்பாசன திட்டங்களை ஏற்படுத்தி விளைநிலங்களை அதிகரிக்கும் பல்வேறு செயற்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு நேற்று விஜயம் செய்த அவர் குளம் புனரமைப்பு திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டின் தேசிய உற்பத்திக்கு ஊக்கமளிக்கின்ற சிந்தனையின் வெளிப்பாடாக இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
ஒருகாலத்தில் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடு இது. இதற்கு முதல் அரிசியைப் பெருமளவில் இறக்குமதி செய்திருந்த நிலைமையையும் நாம் கண்டிருக்கிறோம். அந்தவகையில் விவசாயப்புரட்சி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமே இது.
தற்போது மாகாண விவசாய திணைக்களத்திலே ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு எமக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதனைச் செய்து வருகிறோம். இதன் மூலம் விவசாய திணைக்களத்தின் சேவைகள் மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதேவேளை விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காகப் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களிற்கு 20 மில்லியன் ரூபாயை விடுவித்துள்ளேன். அத்துடன் மேலும் நெல்லினை கொள்வனவு செய்வதற்காக 4 வீத வட்டியிலே பணத்தினை விடுவிப்பதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய ராஜாங்க அமைச்சர் வடக்கிலே அதனை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு நீர்ப்பாசனம் மட்டுமல்லாமல் விவசாயம், விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மாகாண நிர்வாகமும் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடாத்திக்கொண்டிருக்கிறோம். மேலதிகமாக நீர்த்தேக்க திட்டங்களை அமைப்பதற்கும் அதனூடாக குடிநீர் வழங்குதல் மற்றும் விளைநிலங்களை அதிகரிப்பதற்குமான செயற்திட்டங்களையும் மத்திய அரசும் மாகாணசபையும் இணைந்து முன்னெடுக்கவிருக்கின்றன.
எனவே இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி அதன் பயனை அடைய வேண்டும் .இதற்கு மாகாண நிர்வாகம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனத் தெரிவித்துள்ளார்.





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
