வடக்கு மாகாணத்தில் கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டம்
வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
குறித்த முதற்கட்ட பணிகளானது, நாளையதினம் (02.04.2024) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் செயற்பாடுகளை, வலயக் கல்வி பணிமனைகளூடாக நாளை முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பார்வை தொடர்பான சிகிச்சைகள்
இந்த செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் ஏனைய மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ளன.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் ஊடாக பாடசாலைகளில் மாணவர்களின் பார்வை திறன் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், உரிய மாணவர்கள் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இதன்படி, தேவைப்படும் மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்படவுள்ளன.
மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படும் மாணவர்களின் குடும்ப பொருளாதார நிலையினை கருத்திற் கொண்டு, மாணவர்களின் பாடசாலை கற்றல் நிறைவு பெறும் வரை தொடர்ச்சியாக இலவச மூக்குக் கண்ணாடிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி அனுசரணை
அதேவேளை, இந்த செயற்றிட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, ஆளுநரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் இணைந்து இதில் பங்காற்றவுள்ளன.
இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் முத்துசாமி மலரவனின் வழிநடத்தலில் 06 மாத காலத்திற்குள் இந்த செயற்றிட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |