மினுவங்கொடையில் இறைச்சிக்காக விலங்குகளை அறுக்க தடை!
கம்பஹா மாவட்டம் மினுவங்கொடை பிரதேசத்தில் இறைச்சிக்காக மாடுகள் உட்பட விலங்குகளை அறுக்கவும் மாட்டிறைச்சியை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளதாக மினுவங்கொடை நகர சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டுக்கான மாட்டிறைச்சி விலைமனு கோரல்களை நகர சபை இரத்துச் செய்துள்ளது.
நகர சபை எல்லைக்குள் மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகளை இறைச்சிக்காக அறுக்க தடை செய்யப்பட்டுள்ள போதிலும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நகர சபையின் தலைவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை அறுக்க தடைசெய்ய அரசாங்கம் எடுத்துள்ள வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் பல இடங்களில் முஸ்லிம் மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.முஸ்லிம்களின் பிரதான உணவுகளில் மாட்டிறைச்சியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.