மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்க அச்சுறுத்தல் விடுக்கும் கலால் வரி திணைக்கள ஆணையாளர்
இடமாற்றம் கிடைத்துள்ள கலால் வரி திணைக்கள ஆணையாளர் இடமாற்றத்தில் செல்லாமல், மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரி பிரதேச செயலர்களை எச்சரிப்பதாக வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் செயலாளர் செல்லையா குமாரசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
சங்கானையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “சங்கானையில் புதிதாக ஒரு மதுபான சாலையை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டது.
உடனடி அனுமதி
இந்த விடயம் எமக்குத் தெரியவந்த நிலையில் கடந்த மூன்றாம் திகதி சர்வதேச நல்லொழுக்க தினத்தன்று சங்கானை பிரதேச பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தோம்.
இது இவ்வாறு இருக்கையில் கொழும்பு மதுவரித்திணைக்கள ஆணையாளர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களான சங்கானை, கோப்பாய், தெல்லிப்பழை, கரவெட்டி மற்றும் நல்லூர் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு ஒரு கடிதத்தினை அனுப்பியுள்ளார்.
குறித்த மதுபானசாலைகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், அல்லது உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலர்களுக்கு கடிதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதம் தனி சிங்களத்திலேயே அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரு நல்ல அரசாங்கம் தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் அந்த அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கலால் திணைக்களம் செயற்பட்டு வருகிறது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |